திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் இருவர் பலி
திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் இருவர் பலியானார்கள்.;
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, ராசாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது 42). லாரி டிரைவரான இவர் நாமக்கல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தா.பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார். தா.பேட்டை அருகே அண்ணாமலை நகர் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் எதிர்பாராதவிதமாக ரத்தினகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தினகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று தா.பேட்டை அருகே ஊரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரசாந்த்(18). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்த இவர், மோட்டார் சைக்கிளில் தா.பேட்டை சென்று விட்டு மீண்டும் ஊரக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்தும் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அரசு பஸ் டிரைவர் ரெங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.