ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி உள்பட இருவர் கைது
திருச்சி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூலிதொழிலாளியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள வேம்பனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். கூலி தொழிலாளி. இவர் தனது நிலத்திற்கு தனிப்பட்டா வழங்க கோரி வேம்பனூர் கிராம நிர்வாக அதிகாரி சோலைராஜ் (வயது27) என்பவரை அணுகினார்.
அப்போது தனிப்பட்டா வழங்கவேண்டும் என்றால் தனக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கவேண்டும் என சோலைராஜிடம் கண்டிப்பாக கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன் இது குறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டனிடம் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்து இருந்தனர். ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாட்டின்படி கருப்பன் கிராம நிர்வாக அதிகாரி சோலைராஜிடம் ரூ.7 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர். பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோலைராஜ் லஞ்ச பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த பாஸ்கர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் சோலைராஜின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இந்த சோதனையின்போது வேறு பணம், ஆவணம் எதுவும் சிக்கியதா? என தெரியவில்லை.