அரசு பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பிச்சம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பாலாஜி (வயது 11) என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். உணவு இடைவேளையின் போது அவன் கழிவறைக்கு சென்றுள்ளான். அப்பொழுது அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியாக வந்த பாம்பு மாணவனின் கையை தீண்டி உள்ளது. உடனே அழுதுகொண்டே ஓடிச் சென்ற அந்த மாணவர் ஆசிரியரிடம் இதை தெரிவித்தார்.
உடனே ஆசிரியர்கள், மாணவனை புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து பண்ணைபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி கழிவறையை சுற்றியுள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.