மணப்பாறை அருகே காதல் கடித பிரச்சினையில் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி
மணப்பாறை அருகே காதல் கடித பிரச்சினையில் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த 14 வயது மாணவன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அந்த கடிதத்தை படித்து ஆத்திரமடைந்த மாணவி, பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை கூறி கடிதத்தையும் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மாணவரை அழைத்து வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து, சில ஆசிரியர்கள் சேர்ந்து சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை அடித்துள்ளனர்.
இதனால் மன வேதனையடைந்த அந்த மாணவர் மாலை வீட்டிற்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
மேலும்அந்த மாணவர் நேற்று பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். அப்போது பள்ளி செல்லுமாறு பெற்றோர் கண்டித்த நிலையில், தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதை தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர் மாணவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.