திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
திருச்சி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே மதுக்காரன்பட்டியில் உள்ள தோனியாற்றில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, 2 பேர் டிராக்டர், டிப்பரில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மணல் அள்ளிய புரசமடைக்களத்தைச் சேர்ந்த பிராம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35), பிராம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 32) ஆகியோர் மீது, வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ததுடன், டிராக்டர் மற்றும் டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.