மணப்பாறை காகித ஆலையில் தொழிலாளி திடீர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

மணப்பாறை காகித ஆலை பாய்லர் ஆபரேட்டர், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2021-10-31 10:45 GMT

மணப்பாறை மொண்டிப்பட்டி காகித ஆலையில் நெஞ்சுவலியால் இறந்த பாலமுருகன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 1500 நேரடி பணியாளர்களும், 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் முதல் ஷிப்டில் பணிபுரிய இந்த தொழிற்சாலையின் பாய்லர் ஆபரேட்டர், திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பவர் வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து செக்யூரிட்டி உள்ளிட்ட மற்ற ஊழியர்கள் தொழிற்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் இல்லை. இதன் காரணமாக அங்கிருந்த நர்ஸ் அவரின் நாடித்துடிப்பை பரிசோதித்து விட்டு பல்ஸ் விரைவாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய மருத்துவர்களை இரவு நேர ஷிப்டில் பணியமர்த்தாததே இந்த இறப்புக்கு காரணம் என்று தொழிற்சாலை ஊழியர்களின் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News