மக்களைத்தேடி மருத்துவம்: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-03 12:24 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகின்ற வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆக.5 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வீடு தேடி சென்று இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

நோயுற்றவர் வீட்டியிலிருந்தே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளவும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் நோயாளுகளுக்கு தனி மருந்து பெட்டி அளிக்கப்படுகிறது. அதில் சிகப்பு கவரில் இரத்த அழுத்தம் மற்றும் இருதயநோய்களுக்கான மாத்திரைகளும், ஊதா கவரில் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.

இதில் பெண் தன்னார்வலர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்திட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்நிலையில் திட்டம் குறித்த ஆலோசனைகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சாலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயற்கை சிகிச்சை பிரிவு வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் மணப்பாறை வட்டார பகுதியில் முதற்கட்டமாக 16 துணை சுகாதார நிலையங்கள் வாரியாக 16 பெண் மருத்துவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு திட்டம் செயல்படவுள்ளது.

பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் எஸ்.ராம்கணேஷ், மாவட்ட தாய்,சேய் நல அலுவலர் உஷாராணி, மாவட்ட தொற்றாநோய் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜோபெரில், துணை இயக்குனர் தொழிற்நுட்ப உதவியாளர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆ.சந்தோஷ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பெண் மருத்துவ தன்னார்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News