மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்கள் கைது
மணப்பாறை அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் நேற்று இரவு சட்ட விரோதமாக சிலர் கிணற்று மண் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்ட ஓட்டுனர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை தப்பி ஓடிய வாகன ஓட்டுனர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கருங்காம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42), நாவாடிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வாகன உரிமையாளர்கள் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (50) மற்றும் கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (31) உள்ளிட்ட இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.