மணப்பாறையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மணப்பாறையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை வியாபாரிகள் மூலம் மட்டுமே விற்கப்படுவதால் போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் அரசே நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தற்போதைய தி.மு.க. அரசு மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நான்கு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. முதன் முதலாக இன்று மணப்பாறை அருகே உள்ள பிராம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நெல் கொள்முதல் நிலையத்தில் முதன்முதலாக விற்பனை செய்வதற்காக நெல் ஏற்றி வந்த வாகனத்தை பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் மணப்பாறை பகுதியில் மேலும் மூன்று இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தற்போது மணப்பாறை பகுதியில் நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மணப்பாறை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.