திருச்சி: மணப்பாறை அருகே நாட்டுத்துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாட்டு துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 20).இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியான இவர் வீட்டின் அருகேதனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் இரத்தவெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு நள்ளிரவு தகவல்கிடைத்துள்ளது.
இதையடுத்து நள்ளிரவு சம்பவ இடத்துக்கு சென்றபோலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்த பாலசுப்பிரமணி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் கிடந்த காட்டுப்பகுதியிலிருந்து உடைந்தநிலையில் நாட்டு துப்பாக்கி ஒன்றைபோலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து பாலசுப்பிரமணி உயிரிழந்ததைபோலீசார் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர் என்கிற ராஜாவிற்கு 2மனைவிகள். அதில் இளைய மனைவி அம்சவள்ளிக்குபிறந்தவர் பாலசுப்பிரமணி என்பது தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் தகராறு செய்வதும் அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம்.
வழக்கம் போல் நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டநிலையில், அழகருக்கும்,பாலசுப்பிரமணிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மகன் துப்பாக்கிகுண்டு பாய்ந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட போது, அங்கு தந்தை அழகர் இல்லாமல் தலை மறைவாகியுள்ளார்.
பாலசுப்பிரமணி கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதால் அவர் தானாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாட்டு துப்பாக்கி உடைந்தநிலையில் கிடப்பதால் தந்தையால் சுட்டு கொலை செய்யப்பட்டாரா? நாட்டுதுப்பாக்கி எப்படி வந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.