மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 33). மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி இரவு பணி முடிந்து விராலிமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் மருத்துவமனை அருகே பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர் இருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் செயினை பறித்துள்ளனர். சுதாரித்து கொண்ட ராதிகா செயினை விடாமல் பிடித்து கொள்ளவே, பாதி செயினை பறித்துக் கொண்டு வழிப்பறி கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சூப்பர் மார்க்கெட்டில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து ராதிகா கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த ராமர் (வயது 44) மற்றும் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் நகரை சேர்ந்த சேகர் மகன் ராஜேஷ் (வயது 19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.