துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு

துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2021-12-04 03:30 GMT

துறையூர்,  வேணுசந்திப்பு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 72). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் ஸ்ரீரங்கத்திலும், மகள் பெரம்பலூரிலும் வசித்து வருகின்றனர். இதனால் துறையூரில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலையில் தனலட்சுமி வீட்டுக்கு பெண் ஒருவர் வந்து பேச்சு கொடுத்துள்ளார். அப்போது தனலட்சுமி தனக்கு தீராத கால்வலி, உடல்வலி இருப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் நான் மசாஜ் செய்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு தனலட்சுமி தனக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து,  தனலட்சுமியை படுக்க வைத்து மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது,  அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கீழே வைக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் கழற்றி கீழே வைத்தார். பின்னர் மசாஜ் செய்து முடித்த பின்பு, கால்வலிக்கு தைலம் தேய்க்க வேண்டும், நீங்கள் ஒரு மணி நேரம் நகரக் கூடாது. நான் சென்று தைலம் வாங்கி வருவதாக கூறி சென்ற பெண் மீண்டும் வரவில்லை. இதனிடையே எழுந்து பார்த்த தனலட்சுமி தங்க சங்கிலியை பார்த்த போது, அதனை காணவில்லை. அந்த பெண் நூதன முறையில் ஏமாற்றி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தனலட்சுமி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News