திருச்சி அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

திருச்சி அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-04 03:50 GMT

கைது செய்யப்பட்ட பெண் தாசில்தார் லட்சுமி.

அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர் எம்.எல்.ஏ. எம்.பி.க்கள் போன்ற மக்கள் பணி பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் உள்ளது. இதற்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் என காவல்துறையில் தனியாக ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது இந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையின் பணியாகும். லஞ்சம் தொடர்பாக தங்களிடம் புகார் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லஞ்சம் வாங்கிய தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சுப்ரமணியன். இவர் ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மஞ்சம்பட்டியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகே துவரங்குறிச்சியில் இருந்து செந்துறை செல்லும் சாலையில் இவரது நிலம் வழியாக மின்சார கம்பி செல்கிறது. இந்த கம்பியை அங்குள்ள பொதுப் பாதையில் இருந்த மரத்தின் கிளைகள் மீது உரசி படி சென்றதால் இந்த மரக்கிளைகளை கடந்த மாதம் 25ஆம் தேதி சுப்பிரமணியன் வெட்டி உள்ளார். இதை அறிந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியனிடம், அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக உங்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று மிரட்டியிருக்கிறார். உங்கள் மீது போலீசில் புகார் அளிக்காமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்  துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்  துணை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஆலோசனையின் பெயரில் சுப்பிரமணியனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.பத்தாயிரத்தை கொடுத்தனர். இந்த பணத்தை ஏற்கனவே கூறியபடி தாசில்தார் லட்சுமியிடம் சுப்பிரமணியன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் லட்சுமி பணம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.போலீசார் கைது செய்ததும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக லட்சுமி மயங்கினார். உடனடியாக அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்  சேர்த்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்து உடல் நிலை சீரானதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர். பெண் தாசில்தார் லஞ்சம் வாங்கிய சம்பவம் மணப்பாறை பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News