திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்- 2 பேர் கைது
திருச்சியில் ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
திருச்சி திண்டுக்கல் சாலை வையம்பட்டி பகுதியில் நேற்று ஆம்னி வாகனம் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்வதாக குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் அந்த சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வண்டி எண் 59 கியூ 7816 என்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில். அதில் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 16 மூட்டைகளில் 800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த முனியாண்டி (வயது 29) மற்றும் சூர்யா (வயது 19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.