அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த கிராம உதவியாளர் தற்கொலை

திருச்சி அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-02 04:47 GMT

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள 94-கரியமாணிக்கம் தெற்கு தெரு வைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிலரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 45 பேரிடம் சுமார் ரூ.2 கோடியை கடந்த ஒரு வருடமாக பெற்றதாகவும், இதற்கு உதவியாக துறையூர் பகுதியை சேர்ந்த பிரசன்னா மற்றும் அவரது தம்பி சந்துரு ஆகியோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பணம் கொடுத்த நபர்களுக்கு வேலை வாங்கித் தராததால், இது குறித்து துறையூர் போலீசில் சந்துரு, பிரசன்னா ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த சந்துரு கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், செல்வராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் புகார் தொடர்பாக சிறுகனூர் போலீசார் எவ்வித விசாரணையும் நடத்தாத நிலையில், 94-கரியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சிலர் செல்வராஜிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த அவர் நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News