திருச்சியில் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

திருச்சியில் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-28 12:41 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா எதுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமர். கூலி தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.இதனை தொடர்ந்து ராமரின் மனைவி அமிர்தம் தனது கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு எதுமலை கிராம நிர்வாக அதிகாரி சுரேஷை அணுகி உள்ளார்.

விதவை பெண்ணாயிற்றே என்று கூட பார்க்காமல் வி.ஏ.ஓ. சுரேஷ் தனக்கு ரூ.1000 லஞ்சமாக தந்தால் தான் இறப்பு சான்றிதழ் தர முடியும் என கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க கையில் பணம் இல்லாத நிலையில் மனம் உடைந்த அமிர்தம் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அமிர்தத்திடம் கொடுத்து அனுப்பினர். இன்று அமிர்தம் அந்த பணத்தை வி.ஏ.ஓ. சுரேஷிடம் கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News