திருச்சி அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் உதிரி பாகங்கள் திருட்டு
திருச்சி அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் உதிரி பாகங்கள் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை வானகரம் மகாலட்சுமி நகர் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு (வயது 35). பார்சல் புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு வாகன உதிரி பாக நிறுவனம் சென்னையில் உள்ள ஒரு பெரு நிறுவனத்தில் உதிரி பாகங்கள் ஆர்டர் செய்தது. இந்த வாகன உதிரி பாகங்களை குமரகுரு தனக்கு சொந்தமான ஈச்சர் வேனில் திருச்சிக்கு அனுப்பி வைத்தார். வேனை சிவராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சிறுகனூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது நள்ளிரவு டிரைவர் ஓய்வெடுப்பதற்காக வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது மர்ம நபர்கள் கண்டெய்னரின் பின்பக்க பூட்டை உடைத்து அதிலிருந்து விலை உயர்ந்த 49 உதிரிப்பாக பெட்டிகளை தூக்கி சென்று விட்டனர்.
இது தெரியாமல் அதிகாலையில் ஈச்சர் வேனை ஓட்டிக்கொண்டு சிவராஜா ஆர்டர் கொடுத்த நிறுவனத்துக்கு சென்றார். அந்த ஷோரூம் ஊழியர்கள் ஆர்டர் கொடுத்த பொருட்களை சரிபார்த்த போது 49 பெட்டி வாகன உதிரி பாகங்கள் இல்லாமல் இருந்தது கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். அதைத் தொடர்ந்து குமரகுருவுக்கு புகார் தெரிவித்தனர். உடனடியாக அவர் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட ஈச்சர் வேன் கண்டெய்னரை உடைத்து வாகன உதிரி பாகங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.