திருச்சி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள செங்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி வள்ளி (வயது 40). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி கூச்சலிட்டதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து ஒருவனை பிடித்தனர். பின்னர் அவனை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும், அவன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலன் (19) என்பவரை பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து முக்கால் பவுன் தாலி சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.