அனுமதியின்றி இயக்கிய 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: ரூ.2.70 லட்சம் அபராதம்

திருச்சியில் முறையான அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-22 07:00 GMT

போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்.

திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் தவிர தனியார் ஆம்னி பஸ்களும் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், உரிமம் இல்லாமல் இயங்குவதாக திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் திருச்சி, சமயபுரம் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (வயது 40) என்பவர் முறையாக உரிமம் பெறாமல் ஆம்னி பஸ்சை பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு இயக்கி சென்றது தெரியவந்தது. அவருக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதித்து ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (55) என்பவர் தேனியில் இருந்து சென்னைக்கு இயக்கிய ஆம்னி பஸ்சை வழிமறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரும் உரிமம் இல்லாமல் ஆம்னி பஸ்சை இயக்கியது தெரியவந்தது. அவருக்கும் ரூ.1லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதித்து ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News