லாரி உரிமையாளர் கொலையில் முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி உட்பட 6 பேர் கைது

திருச்சி அருகே நடந்த லாரி உரிமையாளர் கொலை வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தம்பி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-12 03:37 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரிப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமாரை அவர்களது நண்பர்கள் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து, அவருடைய கை மற்றும் கால்களை கட்டி அந்த பகுதியில் உள்ள வரத்து ஏரியில் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஜீயபுரம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விடிய, விடிய தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவெள்ளறை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், அவர்கள் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜா (34), சுரேஷ் என்கிற பாண்டி(29), புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) (இவர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி ஆவார்) மற்றும் அரவிந்தசாமி (19), ஷேக் அப்துல்லா (45), என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லியையும்(63) போலீசார் கைது செய்தனர்.

அம்சவல்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.37 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது. அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு மீண்டும், மீண்டும் பணம் கேட்டு அம்சவல்லியிடம் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அம்சவல்லி மகன் என்றும் பாராமல் கூலிப்படையை ஏவி சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக மேற்கண்ட 5 பேரிடமும் ரூ.5 லட்சம் பேரம் பேசி அட்வான்ஸ் தொகையாக ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 5 பேரும் சதீஷ்குமாரை கொலை செய்து ஏரியில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைதான 6 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி போலீசார் சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த மண்ணச்சநல்லூர் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News