திருச்சி அருகே வேடிக்கை பார்க்க வந்தவர் ஆற்றில் தவறி விழுந்து பலி

திருச்சி அருகே தண்ணீர் நிரம்பியதை பார்க்க சென்ற வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-11-19 13:23 GMT

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் திருமலையில் உள்ள பெரியகுளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பெய்த கனமழை காரணமாக இந்த குளமானது நிரம்பி குளத்தின் கலிங்கு வழியாக நீர் ஆற்றிலே வழிந்து ஓடியது.

10 வருடங்கள் கழித்து தண்ணீர் நிரம்பி ஓடுவதை காண்பதற்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் எதுமலையை சேர்ந்த சஞ்சீவிகுமார் (வயது 19) என்பவர் குளம் நிரம்பி ஆற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர தேடலுக்கு பின்பு சஞ்சீவிகுமார் உடலை மீட்டனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சீவிகுமார் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் என்பது பரிதாபமான விஷயமாகும்.

Tags:    

Similar News