திருச்சி சமயபுரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி சமயபுரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-18 04:45 GMT

பைல் படம்.

திருச்சி சமயபுரம் அருகேயுள்ள புறத்தாக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தனபாக்கியம். இவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டி உள்ளார்.

இந்தநிலையில் தனது இடத்துக்கு பட்டா கேட்டு சிறுகனூர் அருகே உள்ள கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரி மலர்க்கொடியிடம் (வயது 39), பெரியசாமி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், பட்டா வழங்க மலர்க்கொடி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பெரியசாமி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து மலர்க்கொடியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி நேற்று மலர்க்கொடி வீட்டில் லஞ்ச பணத்தை பெரியசாமி கொடுத்த போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News