சமயபுரம் கோவிலில் போலி டோக்கன் கொடுத்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் கைது
சமயபுரம் கோவிலுக்குள் பக்தர்களை அனுப்ப போலி டோக்கன் கொடுத்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மூலம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கோயிலில் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது, ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வரும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோ விலை சேர்ந்த சிலம்பரசன் (வயது 26) என்பவர் அன்று பணியில் இல்லாத நிலையிலும் சீருடை அணிந்து போலி டோக்கனை பக்தர்களுக்கு கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.
இது குறித்து கோயில் கண்காணிப்பாளர் சாந்தி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.