பழைய காதலன் தொந்தரவால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்சி அருகே பழைய காதலன் தொந்தரவு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்,;
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 29). இவர் திருச்சி வயலூர், சோமரசம்பேட்டை பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே அந்தப் பெண் அவரது வீட்டில் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். தற்போது அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மகாதேவன் சமீபத்தில் தனது பழைய காதலியை சந்தித்து மீண்டும் நீ என்னுடன் பழக வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே நாம் காதலித்த போது எடுத்த புகைப்படங்களை உனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் தனது காதலி விஷம் குடித்த சம்பவம் அறிந்து அவரை பார்ப்பதற்காக மகாதேவன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் உறவினர்கள் மகாதேவனை அடித்து உதைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.