திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல்
திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட 50 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஒருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் குறைந்த வாடகையில் கார்களை இயக்கி வருகின்றனர். அதாவது திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமெனில் வாடிக்கையாளரிடம் சென்னை சென்றுவிட்டு திரும்பி வரும் செலவினத்தையும் சேர்த்து இதர வாடகை கார் உரிமையாளர்கள் கட்டணத்தை வசூலிப்பது வழக்கம்.
ஆனால் ஒருவழிப்பாதை ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்னை செல்வதற்கான ஒற்றை பயணத்திற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கார்களை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினரின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு ஓட்டுனர்கள் சங்கமான உரிமைக்குரல் இருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடத்துவதை கைவிட்ட ஒருவழிப்பாதை ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து கார் மற்றும் வேன்களில் புறப்பட்டு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, எங்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த ஒருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட அதிவிரைவு படை போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர லேசான தடியடி நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மறியலில் ஈடுபட்ட ஒருவழிப்பாதை ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50 பேரை கைது செய்தனர். மேலும் கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.