திருச்சி அருகே கீழ வங்காரத்தில் திகம்பர் சமண சிற்பம் கண்டு பிடிப்பு
திருச்சி சமயபுரம் அருகே கீழ வங்காரத்தில் திகம்பர் சமண சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
பண்டைய தமிழகத்தில் சமண மதம் வெகுவாக வழக்கத்தில் இருந்த மதம் என்பதும், பல்வேறு சமண முனிவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்பதும் நாம் அறிந்தது. தற்காலத்தில் குறிப்பிடத்தக்க சமணச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் சித்தன்னவாசல், சித்தரால், கழுகு மலை, அழகர்கோவில், கீழக்குயில்குடி போன்ற ஊர்களே நம் நினைவுக்கு வருவன ஆகும்.
திருச்சிராப்பள்ளி பண்பாட்டு கலாச்சார ஆர்வலர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், பாண்டியன், முகமது சுபேர், கமலக்கண்ணன், சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் சுங்க சாவடியை கடந்து கீழவங்காரம் கிராமம் நோக்கி திரும்புகையில் மதுரை சமணர் சங்கம் சார்பில் சமணர் சின்னம் வடிவில் மஞ்சள் வண்ணத்தில் வைத்திருந்த வழிகாட்டிப் பலகையை பார்த்தர். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சமண முனிவர் சிற்பம் இருப்பதாக தகவல் பலகை தெரிவிக்க, பயணத்தை தொடங்கினர்.
ஆங்காங்கே விவசாயம், கரும்பு நடப்பட்ட நிலங்கள், பாறை குன்றுகள் பார்வையில் தென்பட்டன.கிராமச் சாலை சந்திப்பில் கண்ணில் பட்ட உள்ளூர் மக்களிடம் வழிகேட்டபோது, தங்களுக்கு சமணச் சின்னமும் தெரியாது, திகம்பரும் தெரியாது என கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழவங்காரம் பகுதியில் வேம்பு மரத்தடிக்கு கீழ் ஒரு மகாவீரர் சிற்பம் பண்ணையில் இருப்பதை கண்டுள்ளனர். இது கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
சமண சிற்பம் சுமார் ஒன்றரை அடி அகலம், மூன்றரை அடி உயரத்துடன் மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன், நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது. பீடத்தின் மேல் அர்த்த பத்மாசனத்தில் துறவி அமர்ந்துள்ளார்.கால் மடியில் இடது கை மீது வலது கை வைத்து தியான நிலையில் உள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. அவருக்கு பின்புறம் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடை, சேதமாகியுள்ளன. பல ஆண்டுகளாக வெட்ட வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்துள்ளதை அறியமுடிகிறது.