ஆடு திருடர்களை ஒப்படைத்த பொதுமக்கள்: லஞ்சம் பெற்று தப்பிக்கவைத்த போலீஸ்
ஆடு திருடர்களை பிடித்து பொதுமக்கள் ஒப்படைத்தும் லஞ்சம் பெற்று போலீஸ் தப்பிக்க வைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
திருச்சி அருகே கடந்த மாதம் ஆடு திருடர்களால் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு திருடர்களை போலிசார் கண்காணித்து தொடர்ச்சியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள காவல் நிலையத்தில் ஆடு திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். அந்த திருடனை பணம் வாங்கிக் கொண்டு தப்பிக்க விட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 8.00 மணிக்கு வீடு புகுந்து ஆடுகளை திருட முயன்ற இருவரை ஊர் கிராம மக்கள் பிடித்து, காவல் உதவி ஆய்வாளர் முருகையனிடம் ஒப்படைத்துள்ளனர். திருடனை ஒப்படைத்த திருப்தியில் பொதுமக்கள் வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவரும் ஒரு ஆட்டு மந்தையில் ஆடு திருடிய போது சிக்கினர். அதில் ஒருவன் தப்பித்த நிலையில் மற்றொருவனை மட்டும் ஊர் மக்கள் வளைத்துப் பிடித்துள்ளனர்.
மேலும் பிடிபட்ட ஆடு திருடனிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தபோது கையில் இருந்த ரூ.5000/-ஐ அங்குள்ள போலீசாரிடம் கொடுத்துவிட்டோம். மேலும் ஊருக்கு போக காசு இல்லாததால் மீண்டும் ஆடு திருட வந்தோம் என்று கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், இனிமேல் போலீசிடம் இவர்களை ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவில் அந்நபரை அங்கேயே பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, பொதுமக்கள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக ஐ.ஜி வரை சென்றுள்ளதால் விசாரணை செய்வதற்கு டிஎஸ்பி வர இருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
ஆடு திருடிய நபர்களிடம் மாமூல் பெற்று வெளியே விட்ட போலீசாரால் மாவட்ட எல்லையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.