திருச்சி அருகே வீடு புகுந்து அண்ணன், தம்பி வீடுகளில் நகை -பணம் கொள்ளை
திருச்சி அருகே வீடு புகுந்து அண்ணன், தம்பி வீடுகளில் நகை -பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
திருச்சி அருகே அண்ணன் தம்பி வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள மணக்காடு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகேசன் (45). இவர் ஹார்டுவேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது வீடு அடுத்தடுத்து அமைந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். அதேபோல் முருகேசனும் தனது நிறுவனத்துக்கு சென்றுவிட்டார். இருவரும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தனர்.அப்போது இரண்டு வீட்டின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, முருகேசன் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணமும், பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த இரண்டேகால் பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது.
வீட்டை பூட்டிவிட்டு சகோதரர்கள் வெளியில் சென்றதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.