லால்குடி இரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு

லால்குடி இரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-05-16 13:01 GMT
லால்குடி ரயில்வே சுரங்கப்பாதை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி பஸ் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்தப் பாலம் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டதாகும். ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாதவர்களுக்காகவும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதியும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் மேம்பாலம் கட்டும்போது சுரங்க பாதையும் கட்டப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்ட நாள் முதல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சுரங்கப்பாதை பகுதியில் சமூக விரோதிகள் மது பிரியர்கள் கூடி கும்மாளம் அடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த சுரங்கப்பாதையை யாரும் பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக சுற்றுவட்டார கிராம மக்கள் பாலத்தில் ஏறி தான் செல்கிறார்கள். மேலும் அதன் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவிகளும் பயன்படுத்த முடிவதில்லை. இந்த பாலத்தின் நிலை பற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் சமூக நீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.

இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News