திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வயதான தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.;
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி தாலுகா, காணக்கிளியநல்லூர் அருகே உள்ள வந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்(வயது 63). விவசாய கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி ஆக்னஸ்மேரியுடன்(60) மோட்டார் சைக்கிளில் சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி நெம்பர்-1 டோல்கேட்டை அடுத்து பனமங்கலம் அருகே சமயபுரம் செல்லும் சாலைக்கு செல்வதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஜோசப் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் சாலையில் விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். விபத்தில் தம்பதி பலியான சம்பவம் வந்தலை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.