திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை
திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி- சென்னை ரெயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே கடந்த 1-ந்தேதி இரவு தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நள்ளிரவு இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியதில் என்ஜின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டு பழுதாகி நின்றது. மேலும் ரெயிலின் என்ஜின் உள்பட 4 பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விருதாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதி செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இன்று திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் டயர் இருந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய 3 நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் ராணுவ பயிற்சி பெற்ற மோப்ப நாய் மேக்ஸ் இந்த சம்பவத்தில் துப்பு துலக்க பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.