விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-07-29 03:40 GMT

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடல்வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா, விராலி மஞ்சள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதனை தடுக்கும் வகையில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைப்பார் கிராமத்திலிருந்து கீழவைப்பார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற போலீசார் விசாரணை நடத்த சென்ற போது, போலீசாரை பார்த்ததும் அந்த 3 நபர்களும் தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் காரை சோதனை செய்தபோது அந்த காரில் நான்கு மூட்டைகளில் சுமார் 80 கிலோவுக்கு மேல் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை குளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

மேலும், இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News