வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய கனிமொழி எம்பி
வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அந்த நிதியை இன்று கனிமொழி எம்பி வழங்கினார்;
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட குறிப்பன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது . இதில், அரசர்குளத்தை சேர்ந்த முத்துகண்ணன் (வயது 21), விஜய் (25) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினார். ஸ்ரீவைகுண்டம் தாலுகா புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் (26), ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்த சுந்தரம் மகன் ஐசக் பிரசாந்த் (26), சின்னமதிகூடலை சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஐசக் பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வமும், ஐசக் பிரசாந்தும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் - ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில், இன்று (12/09/2024) நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் அரசு அறிவித்தபடி வெடி விபத்தில் மரணமடைந்த நபர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்த இரண்டு நபர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், கடந்த மாதம் 5ஆம் தேதி செம்பூரில் இடி மின்னல் தாக்கி பலியான வீரமுத்து மதன் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும் இழப்பீடாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.