போதையில் நிர்வாணப்படுத்தி தாக்குதல்: தப்பி ஓடிய தந்தை உயிரிழப்பு
விளாத்திகுளத்தில் குடிபோதையில் தாக்கிய மகனிடமிருந்து தப்பியோடிய தந்தை தவறி விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஐயன் விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவர் நெடுங்குளம் ஊராட்சியில் தண்ணீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.
கடந்த பத்து நாட்கள் முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் விஜயகுமார், வயது 30, குருசாமி, முருகேசன் என்ற மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது மூத்த மகனான விஜயகுமார் என்பவர் தூத்துக்குடியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அளவுக்கதிகமான குடிப்பழக்கம் உள்ளவர். கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்துள்ளார். இதனை விஜயகுமாரின் தந்தை ஆத்தியப்பன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் விஜயகுமார் தனது தந்தை அடித்து தாக்கியுள்ளார். மேலும் நிர்வாணபடுத்தி அடித்துள்ளார். அடி தாங்க முடியாமல் ஆத்தியப்பன் வீட்டிலிருந்து வெளியில் ஓடியுள்ளார்.
அப்போது விஜயகுமார் கையில் கத்தியுடன் தந்தயை நோக்கி வந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆத்தியப்பன் ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே ஆத்தியப்பன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆத்தியப்பன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் வைத்து மது அருந்தியதை கண்டித்த தந்தையின் ஆடையை கலைத்தது மட்டுமின்றி, கத்தியுடன் தாக்க வந்ததால் பயந்து ஓடிய தந்தை படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.