போலி பாஸ்போர்ட் கஞ்சா வழக்கு : 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாசார்பட்டி பகுதியில் போலி பாஸ்போர்ட், கஞ்சா வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மாசார்பட்டி காவல் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 03.03.2004 அன்று கஞ்சா கடத்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பயணித்த வழக்கில், இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தபாலன் மகன் யோகராஜ் (எ) அனுரா (48) மற்றும் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கேதார பிள்ளை மகன் விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் (46) ஆகியோரை மாசார்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் யோகராஜ் (எ) அனுரா என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், மற்றொரு எதிரியான விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவருக்கு கடந்த 10.03.2010 முதல் பிடியாணை பிறப்பிக்கபட்டது. 12 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரியை விரைந்து கைது செய்யுமாறு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில், மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான தனிப்படையினர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் பதுங்கியிருந்த விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் என்பவரை கைது செய்தனர். எதிரியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.