சவலாப்பேரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில், அண்மையில் மாணவர்களுக்கு இடைய கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதை தவிர்க்கும் நோக்கில், அப்பள்ளியில் 10 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு, இன்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது: மாணவ, மாணவியர்கள் தான், வருங்காலத்தூண்கள். சாதனையாளர்களாக உருவாக்கக்கூடிய இடம், பள்ளிக்கூடம். மாணவர்கள் அந்த ஒழுக்கத்தை கடைபிடித்து தங்களுக்குள் பிரச்சனை இல்லாமல் படிக்க வேண்டும்.
மாணவர்கள் தவறு செய்து, காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் . ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்லை கேட்டு, மாணவர்கள் ஒழுக்கத்தை கற்று கொண்டால் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளர்களாக வர முடியும் என்றார். அத்துடன், மாணவ மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் சிராஜுதீன், நிர்மலா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், உதவி ஆய்வாளர் கண்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர், பெற்றோர், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.