ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்

ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2021-05-22 08:55 GMT

ஸ்பிக் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடிக்கான காசோலை கனிமொழியிடம் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்காக ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஸ்பிக் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடிக்கான காசோலையை ஆலையின் முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து கனிமொழி எம்பியிடம் வழங்கினர். இந்த நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

மேலும், கொரோனா நோயாளிகளில் சிகிச்சைக்காக ரூ.27 லட்சம் ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட 400 "ஆக்ஸிஜன் புளோ மீட்டர்" மருத்துவ உபகரணங்களையும் இலவசமாக வழங்கினர்.

இதுதொடர்பாக ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் அளிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் ரூ.1.50 கோடி முதலீட்டில் புதிதாக மருத்துவ பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகை தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தயார் செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். நாளொன்றுக்கு 170 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தபோது, தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சைக்காக தொடங்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ பிரிவில் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதை சமீப காலமாக பார்க்க முடிகிறது. எனவே அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 1845 பகுதிகளில் 36 குழுக்கள் மூலம் தடுப்பூசி முகாம்களை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை கண்காணிப்பதற்கே தனியாக செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும், யோகா பயிற்சி வகுப்புகளையும் கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News