வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி ஆலய தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வடுவூர் ஸ்ரீகோதண்டராமசுவாமி ஆலயத்தில் ஸ்ரீராமநவமி பெருவிழாவினையொட்டி நடைபெற்ற தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஸ்ரீஇராமநவமியையொட்டி வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி ஆலயத்தின் திருத்தேரோட்டம் இன்று மாலை விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்ட ராமசுவாமி ஆலயம் வைணவ ஸ்தலங்களில் தொன்மை சிறப்புமிக்கது. இவ்வாலயத்தின் வருடாந்திர ஸ்ரீஇராம நவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீஇராமநவமி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி ஆலயத்தில் இருந்து வில்லேந்திய திருக்கோலத்தில் ஸ்ரீஇராமபிரான், ஸ்ரீசிதாதேவி, ஸ்ரீலெட்சுமணர் சமேதராக திருத்தேரில் எழுந்தருள சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து இழுத்து ஆலய வீதிகளில் ஸ்ரீஇராம திருநாமங்களை முழங்கியவாறு வலம் வந்தனர். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தேரில் பவனிவந்த ஸ்ரீகோதண்டராமருக்கு அர்ச்சனை செய்து மனமுருக வழிபட்டனர்.