மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து வீரப்ப ஐயனார் தரிசனம்
தேனி பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து சென்று வீரப்ப ஐயனாரை தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று சித்திரை மாத பிறப்பு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், கணேச கந்தபெருமாள் கோயில், பூலாநந்தீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
தேனி நகர் பகுதியில் இருந்து ஆறு கி.மீ., துாரம் நடந்து சென்று மலையடிவாரத்தில் உள்ள வீரப்ப ஐயனாரை தரிசிக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு பின்னர் திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றனர். அதிக பக்தர்கள் வருவதால் டூ வீலர், ஆட்டோக்களுக்கு கூட அனுமதியில்லை.
காலை 4 மணி முதல் இரவு வரை துாரல் விழுந்து கொண்டே இருந்தது. இதில் நனைந்து கொண்டே ஆறு கி.மீ., நடந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் (சுமார் 2 லட்சம் பக்தர்கள் என காவல்துறையினர் கூறினர்) வீரப்ப ஐயனாரை தரிசனம் செய்தனர்.
வழிநெடுக பல்வேறு வணிக நிறுவனங்களும், பக்தர்களும் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர், உணவு, பானகரம், நீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர், முருகன், விநாயகருடன் இரவில் நகர் வலம் வந்தனர். தேனி கண்ணாத்தாகோயில், பெத்தாட்ஷி விநாயகர் கோயில், பழைய அரசு ஆஸ்பத்திரி ரோடு, சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, பங்களாமேடு பகுதியில் மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் கோயிலை சென்றடைந்தனர். மணக்கோலத்தில் வந்த மீனாட்சி- சுந்தரேஸ்வரரை மக்கள் வரவேற்று வணங்கினர்.