திருப்பனந்தாள் ஒன்றியத்தில் பலஆயிரம் நெல் மூடைகள் பாதுகாப்பின்றி வீணாகும் அபாயம்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 30 மையங்களில் கொள்முதல் செய்த பல ஆயிரம் நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி வீணாகும் அபாயம்

Update: 2022-02-10 17:00 GMT

கும்பகோணம்  அருகே மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட மானம்பாடி, திருவாய்பாடி, சிறுகடம்பூர், கீழமணக்குடி, ஆரலூர், பந்தநல்லூர், நெய்க்குப்பை, முளையூர், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 6,000 முதல் 8,000 மூட்டைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு கிடங்கிற்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் வராததால் அந்தந்த மையங்களில் எவ்வித பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மழை வரும் நேரங்களில் இந்த மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நெல் மூட்டைகள் வீணாகும் நிலையில் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியர்களே நஷ்டத்தை ஏற்கும் நிலை ஏற்படும். ஆகவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைத்திடவும் மணிக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லாமல் கொள்முதல் தடைபட்டு இருப்பதையும் உடனடியாக கொள்முதல் செய்ய சாக்குகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

இருப்பினும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மையங்களில் நேரில் ஆய்வின் போது மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி ஒன்றிய செயலாளர் டி ஜி ராஜேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் காசிநாதன் விவசாய சங்க சாமிக்கண்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News