நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயி சான்று பெற முகாம்
திருவிடைமருதூர் வட்டார விவசாயிகள் நுண்ணீர்பாசனத் திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயி சான்று பெற முகாம்;
பைல் படம்
திருவிடைமருதூர் வட்டார விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயி சான்று பெற முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக வேளாண் உதவி இயக்குநர் கோ.கவிதா வெளியிட்ட தகவல்: நுண்ணீர்ப்பாசன முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்ய இயலும். இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்கு தேவையான நீர் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதிக்கு செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்பதோடு களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.
குறைந்த அளவு மழைப் பொழிவு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவால் கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரைக் கொண்டு நுண்ணீர்ப் பாசனம் மூலம் பயன் பெறலாம். நீர்ப்பாசனம் செய்வதற்கான நேரமும், ஆட்கள் கூலியும் குறைகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் உரம் இடுவதால் பயிருக்கு தேவையான நீரும், ஊட்டச்சத்தும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்க பெறுகிறது.
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது.
திருவிடைமருதூர் வட்டாரத்திற்கு 2021-22-ஆம் ஆண்டில் 180 ஹெக்டேரில் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் அமைக்க ரூ.60லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் இணைப்புத் திட்டமான துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியத்தொகை ரூ.10,000 மற்றும் மின்மோட்டார் அல்லது ஆயில் என்ஜினிற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மானியத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள், தங்களின் அடங்கல், ஆதார் அட்டை,நில வரைபடம், குடும்ப அட்டை, கணிணி சிட்டா, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும், நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவித மானியம் வழங்கும் பொருட்டு வருவாய்த்துறையில் சிறுகுறு விவசாயி சான்று அத்தியாவசியமாகும்.
எனவே, நடப்பு 2021-22 -ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ள விவசாயிகள் 18.8.2021 அன்று திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு சான்று பெற்று பயனடையலாம்.