திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கொரோனா, ஸ்டேசன் மூடல்
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட கைதிகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கடம்பங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு காவிரி ஆற்றில் மணலை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் திருடிச் செல்வதை பார்த்துள்ளனர். போலீசாரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளில் மணல் கொள்ளை அடிக்கும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து போலீசார் அதில் 10 பேரை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் இருந்த மணல் மூட்டைகள் உடன் 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அதில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களைப் படிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், பெண் காவலர் மகதீஸ்வரி ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 10 குற்றவாளிகளில் தொற்று உள்ள இரண்டு பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேரும் திருவிடைமருதூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் பெண் காவலர் மகதீஸ்வரி ஆகியோர் கும்பகோணம் அன்னை கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பனந்தாள் காவல் ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.கைதிகள் மூலம் காவல் ஆய்வாளருக்கு கொரோனா பரவியது கும்பகோணம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.