சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய பரிபூரணம் அடைந்தார்
சூரியனார்கோயில் ஆதீன மடத்தின் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வயது முதிர்வின் காரணமாக பரிபூரணம் அடைந்தார்.;
கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வயது முதிர்வின் காரணமாக இன்று பரிபூரணம் அடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகள் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித்தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சேவைபுரிந்தார். அதன்பின், திருவாவடுதுறை 23வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கே, ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 27வது பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார். சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மட்டத்தில் மேற்கொண்டார். பழமையான கோவில்களை புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார். 102 வயது முதிர்வு காரணமாக சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.