பிரதமர் மோடி படத்தை அகற்றிய பேரூராட்சி தலைவர்: வேப்பத்தூரில் பரபரப்பு
வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை பேரூராட்சி தலைவர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் மதியழகன். இவரது மனைவி அஞ்சம்மாள் திமுகவை சேர்ந்தவர், பேரூராட்சி தலைவர். பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகரன் உள்ளார். இவர், நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாளிடம், அவரது கணவர் மதியழகன், மோடி படத்தை உடனே அகற்றும்படி அறிவுறுத்தினார். அதன்படி, பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள், மோடி படத்தை அகற்றி செயல் அலுவலர் லதாவிடம் எடுத்துச் சென்று ஒப்படைத்தார். திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் மோடியின் படத்தை அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்தும் காட்சியை, பாஜக உறுப்பினர் சந்திரசேகரன் செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் வெளியிட்டார்.
இது பாஜகவினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து பேரூராட்சி அலுவலகம் திறக்கப்படும் போது, போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.