திருவிடைமருதூர் அருகே நெய்வாசல் ஊராட்சியில் மர்மக்கொலை
திருவிடைமருதூர் அருகே நெய்வாசல் ஊராட்சியில் நடந்த மர்மக் கொலை குறித்து விசாரணை நடக்கிறது.;
இளையராஜா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குச்சிபாளையம், காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் இளையராஜா (40). இவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது அக்கா செல்வநாயகியின் மகள் அனிதா (35) உடன் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு அனு ஹாசினி (9) நிரஞ்சன் (7) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அக்கா செல்வநாயகி வீட்டிற்கு, தனது மனைவியை பார்க்க வந்த இளையராஜா, இரவு அக்கா வீட்டிலேயே தங்கி உள்ளார். நேற்று காலை ஆறு மணிக்கு எழுந்து பார்த்தபோது, இளையராஜா வீட்டில் இல்லாததை பார்த்த மனைவி அனிதா மற்றும் அக்கா செல்வநாயகி, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர்.
இளையராஜாவை தேடியபோது, அனிதாவின் வீட்டிற்கு பின்புறம் உள்ள வாய்க்கால் பகுதியில், மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன், பயிற்சி எஸ்பி பிருந்தா, பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளையராஜாவின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.