ஆரலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு தலைமை கொறடா ஆய்வு
திருப்பனந்தாள் ஒன்றியம் ஆரலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு தலைமை கொறடா ஆய்வு;
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் ஆரலூர் ஊராட்சியில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் பல சிக்கல்களை மேற்கொண்டனர். எனவே, உரிய நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் ஒரு ஊராட்சிக்கு 2 லிருந்து 3 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, உரிய ஊழியர்களை நியமித்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் இரண்டு நாட்களுக்கு மேல் கொள்முதல் நிலையத்தில் இல்லாமல் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முனைப்புடன் செயல்படுகிறார். மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வந்தால் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும் என அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஒத்துழைப்பு அளித்தால், அதிக அளவில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய முடியும். இதுவரை ஒருநாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வர தற்போது ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வருங்காலங்களில், விவசாயிகளுக்கு தார்ப்பாய்களை மானிய விலையில் கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொள்முதல் நிலையத்திற்குத் தேவையான தார்பாய்கள், பிளாஸ்டிக் பாய்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனி பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு உள்ளது. வேளாண் தனி பட்ஜெட் என்ற அறிவிப்பால் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். மேட்டூர் அணையைத் திறந்து ஒரு மாதத்திற்குள்ளாக, ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் இரண்டு மூட்டை யூரியா உள்ளிட்ட குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
கடந்த பத்தாண்டுகளாக கடன் கிடைக்கவில்லை என ஏங்கிக் கிடந்த விவசாயிகளுக்கு, கூட்டுறவு சங்கத்தில் அழைத்து கடன்களை வழங்கி வருகிறோம். இதற்கு காரணம் தமிழகத்தில் விவசாய நிலப்பரப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவின் பெயரில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மூட்டைக்கு கையூட்டு கொடுத்து விற்க வேண்டிய நிலை மாற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் அண்ணாதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பிச்சை பிள்ளை முன்னாள் தலைவர் மிசா மனோகரன் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.