திருவையாறில் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.2 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
நீண்டகாலமாக குத்தகைதாரர் கோயிலுக்கு குத்தகை செலுத்தாமல் இருந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது;
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த கண்டியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர், 10 சென்ட் நிலம் கண்டியூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைதாரர் ஒருவர் குத்தகை எடுத்துள்ளார். பின்னர் நீண்டகாலமாக குத்தகைதாரர் கோயிலுக்கு குத்தகை செலுத்தாமல் இருந்துள்ளார். கோயில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவி்ன்படி, அமலாக்க தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில், ரூ.2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, நில அளவையர் கஸ்தூரி, கண்டியூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கோயில் செயல் அலுவலர் பிருந்தாதேவி, சரக ஆய்வாளர்கள் கீதாபாய், லட்சுமி, கோவில் எழுத்தர் பஞ்சநாதன் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.