நெல்லின் ஈரப்பதம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை: மத்திய குழு தகவல்

இந்த ஆய்வு காலம் தாழ்த்தி நடத்துவதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் குறுவை பருவம் முடிந்து விடும் என விவசாயிகள் கூறினர்;

Update: 2021-10-19 10:15 GMT

நெல்லின் ஈரப்பதம் குறித்து, தஞ்சையில் ஆய்வு மேற் கொண்ட மத்திய குழுவினர் 

நெல்லின் ஈரப்பதம் குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தெரிவித்துள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 சதவீதம் வரை மட்டுமே உள்ள நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பதால், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்ந்த வேண்டும் என தமிழக அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் தென்னிந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு துணை இயக்குனர் எம்.கான், தொழில்நுட்ப அலுவலர்கள் பிரபாகரன், யூனஸ் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள விளாங்குடி, அரசூர், தென்னமநாடு, ஒரத்தநாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்து  சேகரித்த நெல்மணிகளை  சென்னையில் உள்ள பரிசோதனை மையத்தில் ஆய்வுக்குட்படுத்தி, 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்  எனவும்  குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆய்வு என்பது காலம் தாழ்த்தி நடத்துவதாகவும், இன்னும் 15 நாட்களுக்குள் குறுவை பருவமே முடிந்து விடும், எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News