இரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை.
விபத்து ஏற்படுவதற்கு முன் இரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த பெண் மருத்துவர் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சுரங்கப்பாதை மூடப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூர் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கி உள்ளது. இதேபோல் தஞ்சை - திருக்கருகாவூர் பிரதான சாலையில், திட்டை அருகே உள்ள சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால், ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர், இரும்புத்தலை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட ஊர்களின் பிரதான சாலையாக விளங்கும் இப்பகுதியில் தினமும் ஆயிரக் கணக்கான ஊழியர்களும் மாணவ-மாணவிகளும் இந்த வழியாகத்தான் தஞ்சை வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுரங்க பாதையில் நீர் தேங்கியுள்ளதால், சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி கொண்டு செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சில பொதுமக்கள் ஆபத்தை உணராத பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நீரில் இறங்கியும், அவ்வழியாக செல்லும் டிராக்டரில் எறியும் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற திட்டை குரு ஆலயம், திருக்கருக்காவூர் கற்பகாம்பிகை ஆலயம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம், சுவாமி மலை போன்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.