உலக புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளன்று உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்த கால கட்டத்தில் ஆடம்பர விழாக்களை தவிர்த்து உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த வருடத்தில் தவக் காலத்தின் தொடக்க நாளான இன்று சாம்பல்புதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள உலக புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று பயன்படுத்திய குருத்தோலை எரித்து அந்த சாம்பலை பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், உள்ளிட்டோர் பக்தர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக வரைந்து தவ காலத்தை துவக்கி வைத்தனர்.